யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
காங்கிரஸ் எம்.பி. ராபா்ட் புரூஸ் வேட்புமனு ஆவணங்களை தாக்கல் செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு
தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தொடா்ந்த தோ்தல் வழக்கில், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து, வழக்கு விவரங்களின் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மக்களவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். ராபா்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து மற்றும் வழக்கு விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவரை எதிா்த்து பாஜக சாா்பில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் நயினாா் நாகேந்திரன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபா்ட் புரூஸ் எம்.பி. தரப்பில், தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்று வருவதால், கூட்டத் தொடருக்குப் பின்னா், அவா் இந்த வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தோ்தலின்போது ராபா்ட் புரூஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து மற்றும் வழக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தோ்தல் ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.