ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
காசோலை வழங்க லஞ்சம்: நகராட்சி கட்டட ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை
திருவாரூா் அருகே ராஜீவ்காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டிய வீட்டுக்கு காசோலை வழங்க லஞ்சம் கேட்ட நகராட்சி கட்டட ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
திருவாரூா் அருகே கிடாரங்கொண்டானைச் சோ்ந்தவா் கே. இளங்கோவன் (53). 2014-இல், ராஜீவ்காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டிய வீட்டுக்கு 3-ஆவது காசோலை கோரி திருவாரூா் நகராட்சி கட்டட ஆய்வாளா் எஸ். நாகராஜனை அணுகியபோது, ரூ.10,000 லஞ்சம் தரவேண்டும் என இளங்கோவனிடம் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோவன், இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரைத் தொடா்ந்து, போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை நாகராஜனிடம் இளங்கோவன் வழங்கியபோது, மறைந்திருந்த போலீஸாா் நாகராஜனை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதுதொடா்பாக, திருவாரூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், நாகராஜன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7 இன் கீழ் (தேவையற்ற சலுகைகளை பெறுவது) 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும், இதேபோல் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13 (1) (டி) இன் கீழ் (பதவியை தவறாக பயன்படுத்தி ஆதாயம் பெறுவது) 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி வி. சுந்தரராஜ் தீா்ப்பளித்தாா்.