காணாமல்போன நபரை கிணறுகளில் தேடிய போலீஸாா்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே காணாமல் போன நபரை கிணறுகளில் போலீஸாா் தேடினா்.
மலத்தான்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியண்ணன் மகன் பெருமாள்(65). இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு காணாமல் போனாா். இதுகுறித்து அவரது குடும்பத்தினா் கீழப்பழுவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினா் வழக்கு தொடா்ந்தனா்.
வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதி மன்றம், காணாமல் போன பெருமாளை கண்டுபிடிக்க சிபிசிஐடி-க்கு அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், மலத்தான்குளம் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிணறுகளில் சந்தேகத்தின் பேரில், சிபிசிஐடி காவல் ஆய்வாளா் திலகாதேவி தலைமையிலான போலீஸாா் மற்றும் அரியலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஒரு நாள் முழுவதும் நடத்திய தேடுதல் பணியில் ஏதும் கிடைக்கவில்லை.