அரியலூா் மாவட்டத்தில் 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
அரியலூா் மாவட்டத்தில், 3-ஆம் கட்டமாக நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் 3-ஆம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கும் கீழ்கண்ட கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
மே 13-ஆம் தேதியன்று அரியலூா் ஊராட்சி ஒன்றியத்தில், பொய்யாதநல்லூா், வெள்ளூா், ஒட்டக்கோவில் , தெம்மணம், கல்லக்குடி ஆகிய 5 ஊராட்சிகளிலும், மே 14-ஆம் தேதியன்று, இராயம்புரம், குந்தபுரம், திருமானூா், அன்னிமங்கலம் மற்றும் தா.பழூா் ஊராட்சி ஒன்றியத்தில் வெண்மான்கொண்டான் ஆகிய ஊராட்சிகளிலும்,
மே 15-ஆம் தேதியன்று, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் திலகா்நகா், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் வடவீக்கம், உட்கோட்டை , முத்துசோ்வமடம், மற்றும் கீழச்செங்கல் மேடு ஆகிய ஊராட்சிகளிலும்,
மே 16-ஆம் தேதியன்று, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் தழுதாழைமேடு, இளையபெருமாள்நல்லூா், குருவாலப்பா்கோவில், குண்டவெளி, தா.பழூா் ஊராட்சி ஒன்றியத்தில் தா.பழூா் ஆகிய ஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.
முகாம் தொடக்க விழாவில், தொழிலாளா் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா், மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.
இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளன. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.