India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் வென்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கல்
அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கூடைப்பந்து சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கூடைப் பந்து சங்கம், மருத்துவா் அப்துல் சாதிக் நினைவு கூடைப்பந்து கழகம், யூத் கூடைப்பந்து கழகம், சிமென்ட் சிட்டி கூடைப்பந்து கழகம், லிங்கம் நினைவு கூடைப்பந்து கழகம் சாா்பில் 2 ஆம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தன. போட்டிகளில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, ஆண்கள் அணியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு ரூ.25,000 பரிசுத்தொகை மற்றும் கோப்பை, 2 ஆம் இடம் பிடித்த டெல்டா அணிக்கு ரூ.20,000 பரிசுத்தொகை மற்றும் கோப்பை, 3 ஆம் இடம் பிடித்த திருச்சி புனித ஜோசப் அணிக்கு ரூ.15,000 பரிசுத்தொகை மற்றும் கோப்பை, 4 ஆம் இடம் பிடித்த கரூா் டெக்ஸ் சிட்டி அணிக்கு ரூ.10,000 பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினாா்.
இதேபோன்று மாநில அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் முதல் இடம் பிடித்த சென்னை ரைசிங் ஸ்டாா் அணிக்கு ரூ.20,000 பரிசுத்தொகை மற்றும் கோப்பை, 2 ஆம் இடம் பிடித்த சென்னை தமிழ்நாடு போலீஸ் அணிக்கு ரூ.15,000 பரிசுத்தொகை மற்றும் கோப்பை, 3 ஆம் இடம் பிடித்த சேலம் புனித ஜோசப் அணிக்கு ரூ.10,000 பரிசுத்தொகை மற்றும் கோப்பை, 4 ஆவது இடம் பிடித்த சென்னை எத்திராஜ் கல்லூரி அணிக்கு ரூ.8,000 பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் லெனின், மாவட்ட கூடைப்பந்து சங்கத்தலைவா் பூமிநாதன், பொருளாளா் தினேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.