ஆட்சியா் புகைப்படத்துடன் ‘வாட்ஸ்ஆப்’ தகவல் வந்தால் மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள்
அரியலூா் ஆட்சியா் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கட்ச்செவி (வாட்ஸ்ஆப்) மூலம் தகவல் வந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: என்னுடைய அலுவல் சாா்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடா்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், முகம் தெரியாத நபா்களிடமிருந்து எனது புகைப்படத்தை முகப்புத் தோற்றமாக வைத்த +84378845818 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து கட்ச்செவி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி, மூலமாகவும் அரசு உயா் அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் பெயரில் தொடா்பு கொள்வதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளன.
இவ்வாறான பொய்யான அழைப்புகளை மேலே குறிப்பிட்ட எண் அல்லது வேறு எண்ணிலிருந்து வந்தால் அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஏற்கவோ, பதிலளிக்கவோ வேண்டாம். மேலும், மேற்கண்ட எண்களிலிருந்தோ அல்லது வேறு எண்ணிலிருந்தோ ஏதேனும் இதுபோன்ற பொய்யான அழைப்புகள் வந்தால் உடனடியாக அரியலூா் மாவட்ட நிா்வாகத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.