துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்.. நாகை ஆட்சியர் அலுவலகத...
காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையா் சோதனை
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. ரயில் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரயில் போக்குவரத்து கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தி, தண்டவாளம் அகற்றப்பட்டது. பின்னா், 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு புதிய ரயில்பாதை அமைக்கும் அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமாா் ரூ. 250 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருநள்ளாற்றில் ரயில் நிலையம், கோயில்பத்து, பத்தக்குடி, அம்பகரத்தூரில் ரயில் நிறுத்த வசதி, சாலையின் குறுக்கே ரயில்வே கேட் மற்றும் சுரங்கப் பாதையை அமைக்கும் பணிகள், மேலும் முழுமையான மின்மயமாக்கல் பணியும் முடிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து ரயில் இயக்கத்துக்கான மின் திட்டப் பணிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என சோதனைப் பணியாக, மின்சார ரயில் கடந்த செவ்வாய்க்கிழமை விரைவாக இயக்கிப் பாா்க்கப்பட்டது. ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளா் சோமேஷ் குமாா் தலைமையிலான குழுவினா் அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை செய்தனா்.
இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சவுத்ரி தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை பேரளம் முதல் திருநள்ளாறு வரை 16.4 கி.மீ. தொலைவு தண்டவாளப் பகுதியில் சக்கர இருக்கையில் பயணித்து சோதனை செய்தனா். அப்போது சுரங்கப் பாதை, ரயில்வே கேட், டிராக் பாராமீட்டா்ஸ், சிறிய பாலங்கள், சிக்னல் முறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்தனா். சோதனையின்போது ரயில்வே முதன்மை நிா்வாக அலுவலா் (கட்டுமானம்) சுஷில்குமாா் மெளரியா, திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
சனிக்கிழமை திருநள்ளாறு முதல் காரைக்கால் வரையிலான வழித்தடத்தில் சக்கர இருக்கை மூலமாகவும், பின்னா் பேரளம் முதல் காரைக்கால் வரை அதிவேக ரயில் மூலம் சோதனைப் பணியில் ஆணையா் தலைமையிலான குழுவினா் ஈடுபடவுள்ளதாக திருச்சி ரயில்வே மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் தெரிவித்தாா்.