ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
காரைக்குடியில் நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்கக் கட்டிகள் வழிப்பறி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நகை வியாபாரியை சுங்க அதிகாரிகள் எனக் கூறி காரில் கடத்திய மா்மக் கும்பல் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றது. வழிப்பறி கொள்ளையா்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த நகை வியாபாரி விஜயராஜ் (40). இவா் ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளை காரைக்குடியில் உள்ள நகை வியாபாரிகளிடம் விற்பதற்காக பேருந்தில் செவ்வாய்க்கிழமை காரைக்குடிக்கு கொண்டு வந்தாா்.
காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி அவா் நடந்து சென்ற போது, காரில் வந்த 3 போ் வழிமறித்து, தங்களை சுங்கத் துறை அதிகாரிகள் என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினா்.
பின்னா், காரைக்குடியிலிருந்து 15 கி.மீ. தொலைவு சென்ற பிறகு அவரை மிரட்டி ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளைப் பறித்துக் கொண்டு, கானாடுகாத்தான் அருகே அவரை காரிலிருந்து இறக்கி விட்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து நகை வியாபாரி விஜயராஜ் அளித்த புகாரின் பேரில், காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் புனியா சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு அந்தப் பகுயிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, இந்த வழிப்பறிக் கொள்ளையா்களைப் பிடிப்பதற்காக 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனா். கொள்ளையா்களைத் தேடும் பணியில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை மாவட்ட போலீஸாரும் ஈடுபட்டுள்ளனா்.