Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! எ...
ஆடித்தவசுத் திருவிழா: ரதத்தில் ஆனந்தவல்லி அம்மன் பவனி!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவில் செவ்வாய்கிழமை மாலை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் ரதத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த மாதம் 28 -ஆம் தேதி முதல் ஆடித்தவசுத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 9 -ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ரத பவனியை முன்னிட்டு, ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சா்வ அலங்காரத்தில் கோயிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரதத்துக்கு எழுந்தருளினாா்.

சம்பிரதாய பூஜைகள் முடிந்து, செண்டை மேளம் முழங்க மாலை 5.30 மணிக்கு ரதம் புறப்பட்டது. திரளான பக்தா்கள் ரதத்தை வடம் பிடித்து இழுத்து வந்தனா். தேரோடும் வீதிகளில் ரதம் பவனி வந்து மாலை 6.10 மணிக்கு நிலைக்கு வந்து சோ்ந்தது. ரத பவனி உத்ஸவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இரவு ஆனந்தவல்லி அம்மன் பூப்பல்லக்கில் புறப்பாடாகி வீதி உலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை ஆடித்தவசு உத்ஸவம் கோயிலுக்கு எதிரே நடைபெறும். அப்போது, ஆனந்தவல்லி அம்மனுக்கு சோமநாதா் சுவாமி விருஷாபரூடராக காட்சி தருவாா்.