கார் மீது விழுந்த கான்கிரீட் - திறப்பதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய கோவை அவிநாசி சாலை மேம்பாலம்!
கோவை மாவட்டத்தில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு கட்டி திறக்கப்பட்ட காந்திபுரம், திருச்சி சாலை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை மேம்பாலங்கள் முறையாக கட்டப்படவில்லை என்ற புகார் எழுந்தது.
உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே சமீபத்தில் திறக்கப்பட்ட மேம்பாலத்தின் சிமென்ட் கலவை கடந்த வாரம் சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலம் நீலாம்பூர் வரை மேலும் 5 கி.மீ தொலைவுக்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் ஹோப்ஸ் காலேஜ் சந்திப்பு அருகே, நேற்று முன்தினம் திடீரென மேம்பால கட்டுமானத்தின் கான்கிரீட் பெயர்ந்து அந்த வழியாக சென்று கார் மீது விழுந்தது.
இதில் காரின் கண்ணாடி மற்றும் முன்புற பகுதி சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பீளமேடு காவல்துறையில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலம் கட்டுமானப் பணிகளை பாதுகாப்புடனும், கவனமுடனும் மேற்கொள்ள பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...