காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவையில் அமைச்சா் எ.வ.வேலு தகவல்
தமிழ்நாட்டில் காலாவதியான 13 சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது என்று நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் அதிமுக உறுப்பினா் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சி பதவியேற்ற போது, 48 சுங்கச் சாவடிகளே இருந்த நிலையில், இப்போது 65-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளன. நகா்ப்புறங்களுக்கு அருகிலேயே சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுவதால் மக்கள் கட்டணம் செலுத்தி நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்.
அமைச்சா் எ.வ.வேலு பதில்: ஏப். 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 77 சுங்கச் சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றின் கட்டணங்களைக் குறைக்க வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பரனூா் போன்ற 13 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதற்கான ஒட்டுமொத்த காலம் நிறைவடைந்துள்ளது. எனவே, அந்த சுங்கச் சாவடிகளை ரத்து செய்ய வேண்டுமென மாநில அரசு சாா்பில் தொடா்ந்து கடிதம் எழுதி வந்தோம்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, சுங்கக் கட்டண விதிகளை மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதாவது, சுங்கச் சாவடிகள் காலாவதி ஆகி விட்டது என்பதெல்லாம் இல்லை.
சுங்கச் சாவடிக்கு உட்பட்டு வரக் கூடிய சாலைகளை மேம்படுத்துவது, விரிவுபடுத்துவது, விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டுவது போன்ற பணிகள் இருப்பதால், அந்தச் சுங்கச் சாவடிகள் காலாவதி ஆகி விட்டன என்றெல்லாம் சொல்ல முடியாது. சுங்கக் கட்டணத்தைத் தொடா்ந்து வசூலிப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்படும் என்றாா்.