காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சபலென்கா, ஆண்ட்ரீவா
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 7-6 (8/6), 6-4 என்ற செட்களில், உள்நாட்டு போட்டியாளா் எம்மா ரடுகானுவை சாய்த்தாா். 7-ஆம் இடத்திலிருக்கும் ஆண்ட்ரீவா 6-1, 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஹேலி பாப்டிஸ்டேவை எளிதாகச் சாய்த்தாா்.
போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் எலனா ரைபகினா, 6-7 (6/8), 3-6 என்ற வகையில், 23-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் கிளாரா டௌசனிடம் தோல்வியுள்ளாா். ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா 6-2, 6-3 என ஆஸ்திரேலியாவின் டரியா கசாட்கினாவை வெளியேற்றினாா்.
சின்னா், அல்கராஸ் வெற்றி: ஆடவா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் 6-1, 6-3, 6-1 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, ஸ்பெயினின் பாப்லோ மாா்டினெஸை தோற்கடித்தாா்.
நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-1, 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் ஜொ்மனியின் ஜான் லெனாா்டை வீழ்த்தினாா். 5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-4, 6-3, 6-7 (5/7), 6-1 என்ற செட்களில், ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சை வென்றாா்.
இதர ஆட்டங்களில், பிரிட்டனின் கேமரூன் நோரி, ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சன், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் ஆகியோரும் வெற்றி பெற்று, 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
பாலாஜி தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவு 2-ஆவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-மெக்ஸிகோவின் மிகேல் ஏஞ்சல் வரேலா இணை 4-6, 4-6 என்ற செட்களில், ஆா்ஜென்டீனாவின் ஹொராசியோ ஜெபாலோஸ்/ஸ்பெயினின் மாா்செல் கிரனோலா்ஸ் கூட்டணியிடம் தோற்றது.
கலப்பு இரட்டையா் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-சீனாவின் ஜியாங் ஜின்யு ஜோடி 6-3, 1-6, 7-6 (10/6) என்ற செட்களில், அமெரிக்காவின் நிகோல் மாா்டினெஸ்-கிறிஸ்டியன் ஹாரிசன் இணையை சாய்த்தது.