சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
காலிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - கீஸ்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதுகின்றனா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக் 6-0, 6-7 (3/7), 6-4 என்ற செட்களில், 13-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை சாய்த்தாா்.
5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கீஸ் 6-2, 6-3 என்ற நோ் செட்களில், 19-ஆம் இடத்திலிருந்த குரோஷியாவின் டோனா வெகிச்சை வெளியேற்றினாா். இதையடுத்து காலிறுதியில் ஸ்வியாடெக் - கீஸ் மோதுகின்றனா். மற்றொரு ஆட்டத்தில், 17-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-3, 6-4 என கிரீஸின் மரியா சக்காரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டாா்.
மினாா், பால் வெற்றி: ஆடவா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-3, 7-6 (7/3) என்ற செட்களில், 29-ஆம் இடத்திலிருந்த கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை சாய்த்தாா்.
11-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-3, 3-6, 6-2 என்ற செட்களில், 24-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் காரென் கச்சனோவை தோற்கடிக்க, 10-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 7-5, 7-6 (7/3) என்ற கணக்கில், 17-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸை வெளியேற்றினாா்.
இதர ஆட்டங்களில் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக், கனடாவின் கேப்ரியல் டியாலோ, அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஆகியோரும் வெற்றி பெற்றனா்.