யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
கால்நடை மருத்துவப் படிப்பு: 52 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 52 அரசுப் பள்ளி மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை பெற்றனா்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி, திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளி, ஒசூா் மத்திகிரி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் மற்றும் பி.டெக். படிப்புகள் உள்ளன.
பி.வி.எஸ்சி. ஏ.ஹெச். படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜ்ஜ்ஜ்.ஹக்ம்.ற்ஹய்ன்ஸ்ஹள்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 10 மணி வரை படிப்பு மற்றும் கல்லூரி விருப்பத்தை இணையவழியே பதிவு செய்யலாம். ஒதுக்கீடு மற்றும் அதற்கான ஆணை வரும் 26-ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் கலந்தாய்வு நேரடியாக சென்னை மாதவரம் பால்பண்ணையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கன்வென்ஷன் சென்டரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், 49 இடங்களில் 40 இடங்கள் நிரம்பின. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் யாரும் இல்லாததால், அந்த பிரிவில் இருந்த பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் 6 இடங்கள், பி.டெக் 3 இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாக புதன்கிழமை நடைபெற்றது. பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்பில் 45 இடங்கள், பி.டெக். படிப்புகளில் 7 இடங்கள் என மொத்தம் 52 இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான அனைத்து இடங்களும் நிரம்பின.
இடங்களைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சோ்க்கை ஆணையை கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம்-மீனவா் நலத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழங்கினாா். அப்போது பேசிய அவா், கடந்த நான்கு ஆண்டுகளில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் மொத்தம் 140 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, அவா்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக தமிழக அரசால் ரூ.1.65 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த விழாவில் மாதவரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், கால்நடை துறைச் செயலா் என்.சுப்பையன், பல்கலை. பதிவாளா் மற்றும் துணைவேந்தா் (பொ) நரேந்திரபாபு, தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.