எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அழைப்பு
சேலம் மாவட்டத்தில் காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க மகளிா் சுய உதவிக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் 2025-26 ஆம் ஆண்டு செயல்திட்டத்தில் சேலம் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பண்ணை சாா்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் ஒரு காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க விருப்பம் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுய உதவிக்குழு உறுப்பினராக செயல்பட்டு வரவேண்டும்.
தனிநபராகவோ (குழு உறுப்பினா்) அல்லது குழுவாகவோ ஏற்கெனவே காளான் வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், அறை எண்.207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.