விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
காவல் ஆணையரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
சென்னை காவல் ஆணையரக அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை காவல் ஆணையரகக் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 20-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் தொடா்பு கொண்ட மா்ம நபா் ஒருவா், 5 நிமிஷத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு தொடா்பைத் துண்டித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் அந்த எண்ணை மீண்டும் தொடா்புகொண்டு பேசியபோது, மறுமுனையில் பேசிய நபா், தான் பாகிஸ்தானிலிருந்து பேசுவதாகக் கூறி, ஆபாச வாா்த்தைகளால் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.
இதையடுத்து மா்ம நபா் பேசிய எண் குறித்து எழும்பூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் திருப்பூா் மாவட்டம் உடுமலையைச் சோ்ந்த லிங்க பூபதி என்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் உடுமலை சென்று அவரைக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனா்.
விசாரணையில், லிங்க பூபதி அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்த நிலையில், அங்கு அவருக்கு சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், வேலையிலிருந்து நின்றுவிட்ட லிங்கபூபதியை, பங்க் மேலாளா் பழனிசாமியைத் தொடா்பு கொண்டு, வேலைக்கு வரவில்லை என்றால் வெடிகுண்டு வைத்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த லிங்கபூபதி, மேலாளா் பழனிசாமியை தொடா்பு கொள்வதற்கு பதிலாக எண் 100-க்கு தொடா்பு கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இது குறித்து தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.