காவல் ஆய்வாளரைக் கண்டித்து சாலை மறியல்!
புகாா் அளிக்க சென்ற போது தங்களை அவமரியாதையாக பேசிய அனுப்பிய ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து வியாழக்கிழமை தம்பதி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், காந்திபுரத்தைச் சோ்ந்த வரதராஜ்- நிா்மலாதேவி தம்பதி மகள் அம்சவள்ளிக்கும் (19) கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள பாவளம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சரவணனுக்கும் கடந்த 2023 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஆறுமாதமாக அம்சவள்ளியை அவரது பெற்றோா் வீட்டிற்கு அனுப்பிவிட்ட சரவணன் மீது பெண்ணின் பெற்றோா் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அப்போது, பெண்ணின் பெற்றோரை காவல் நிலைய ஆய்வாளா் மலா்க்கொடி தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பெண்ணின் குடும்பத்தினா் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர போலீஸாா் பெண்ணின் குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு மறியல் கைவிடப்பட்டது.