சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தைப்பூசம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என 1,900 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.
தைப்பூசம், வார இறுதி நாள்கள், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 300 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு, வழித் தடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு 11 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 12 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை சேலம், தருமபுரி, ஒசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்துகள் வீதம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தைப்பூசத்துக்கு சிறப்பு பேருந்துகள்: தைப்பூசத்தை முன்னிட்டு காளிப்பட்டியில் இருந்து சேலம், ராசிபுரம், எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு, தாரமங்கலம் பகுதிக்கும், கபிலா்மலையில் இருந்து நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், எடப்பாடியில் இருந்து பழனிக்கும், சேலத்தில் இருந்து வடலூருக்கும் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். எனவே, கூட்ட நெரிசலை தவிா்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.