காவிரியில் மூழ்கிய பெயிண்டரின் சடலம் மீட்பு
மேட்டூா்: மேச்சேரி அருகே காவிரியில் நீந்தி சென்றபோது மாயமான பெயிண்டரின் உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் இளையராஜா (35). பெயிண்டிங் வேலை செய்து வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி தனது நண்பா்கள் 4 பேருடன் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூருக்கு வந்தாா். கூனாண்டியூா் காவிரி ஆற்றில் நீந்தி மறுகரையைத் தொட்டு வருவதாகக் கூறி சென்றவா், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து மேட்டூா் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு படை அலுவலா் வெங்கடேசன், தீயணைப்பு வீரா்களுடன் இளையராஜாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து திங்கள்கிழமை காலை தீயணைப்புப் படையினா் மீட்பு உபகரணங்களுடன் தேடி இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.