கடம்பூரில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு
காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம்: டிரம்ப்
காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மேலும், இடித்து தரைமட்டமாக்க வேண்டிய பகுதியாக காஸா இருப்பதாக அவர் வெளியிட்ட கருத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் டிரம்ப்பை சந்தித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
மேலும், போா்க்களத்திலிருந்து வெடிக்காத ஆபத்தான குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களையும், இடிந்த கட்டடங்களையும் அகற்றி, அப்பகுதியின் மறுகட்டமைப்புக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் எனத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவில் இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.
இதையும் படிக்க : இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போா் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி
இந்த நிலையில், காஸா குறித்து மீண்டும் டிரம்ப் பேசிய கருத்துகளை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் பவுலில் கலந்து கொள்வதற்காக நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்துக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்ட போது, செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“காஸாவை ’பெரிய ரியல் எஸ்டேட்’ தளமாக கருத வேண்டும். மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகள் அதன் மறுவடிவமைப்பைக் கையாளும் பணியை மேற்கொள்ளலாம்.
ஆனால், காஸாவை எங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் ஹமாஸ் படையினர் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ள உறுதியாக உள்ளோம். காஸாவில் தற்போது இடிக்கப்பட வேண்டிய பகுதிகள் மட்டுமே உள்ளன, வேறெதுவும் இல்லை.
எங்கள் திட்டங்கள் பாலஸ்தீன பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அளவில் எதிர்வலைகளை தூண்டினாலும், இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் காஸாவுக்கு திரும்புவதை விரும்ப மாட்டார்கள்.
அவர்கள் காஸாவுக்கு திரும்புவது பற்றி பேசுவதற்கு ஒரே காரணம் மாற்று இடம் இல்லை என்பதால்தான். ஆனால், நாம் அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் வீட்டைக் கட்டிக் கொடுத்தல காஸாவுக்கு திரும்ப விரும்ப மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், டிரம்பின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஹமாஸ் அரசியல் குழு உறுப்பினர் இஸ்ஸாத் அல் - ரிஷேக் வெளியிட்ட செய்தியில்,
“காஸா வாங்கவும் விற்பனை செய்வதற்குமான சொத்து கிடையாது, அது எங்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தின் ஒருங்கிணைந்த பகுதி” எனத் தெரிவித்துள்ளார்.