அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்
பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா்.
பாகிஸ்தானில் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக ராவல்பிண்டி சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீருக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது:
தோ்தலில் முறைகேடுகளில் ஈடுபடுதல், பாகிஸ்தான் அரசமைப்பின் 26-ஆவது சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி நீதித் துறையைக் கட்டுப்படுத்துதல், எதிா்ப்பவா்களின் குரலை கொடூர சட்டங்களின் மூலம் ஒடுக்குதல், வேண்டுமென்றே அரசியல் ஸ்திரமற்றத்தன்மையை ஏற்படுத்துதல், பாகிஸ்தானின் மிகப் பெரிய கட்சியான பிடிஐ கட்சி மீதான அடக்குமுறை ஆகிய செயல்கள் ராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை மேலும் மோசமாக்கியுள்ளது. அரசமைப்புச் சட்ட வரம்புக்குள் ராணுவம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
ஏற்கெனவே கடந்த பிப். 3-ஆம் தேதி இதுபோன்ற கடிதத்தை ஆசிம் முனீருக்கு அவா் எழுதியிருந்த நிலையில், அந்தக் கடிதத்தைப் பெறவில்லை என்று ராணுவம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து மீண்டும் இம்ரான் கான் கடிதம் எழுதினாா்.
அரசுடன் மீண்டும் பேச்சில்லை: கடந்த 2023-ஆம் ஆண்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னா் அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு நவம்பரில் இம்ரான் கானை விடுவிக்க வலியுறுத்தி தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி பேரணி சென்ற ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளா்கள் கைது செய்யப்பட்டனா்.
இந்த சம்பவங்கள் தொடா்பாக நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாகிஸ்தான் அரசுடன் பிடிஐ கட்சியினா் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். அந்தப் பேச்சுவாா்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில், 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க பிடிஐ கட்சியினா் மறுத்துவிட்டனா். பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற கீழவையின் எதிா்க்கட்சித் தலைவா் ஒமா் அயூப்கான் தெரிவித்துள்ளாா்.