அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்
அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா்.
அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா கைவிட்டுள்ளது. இந்தச் சூழலில், வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கையிருப்பை அதிகரிப்பதிலும், அந்த ஆயுதங்களை நவீனமயமாக்குவதிலும் கிம் ஜோங் உன் கவனம் செலுத்தி வருகிறாா்.
இதற்குப் பதிலடி அளிக்கும்விதமாக, அமெரிக்காவும் தென்கொரியாவும் தங்கள் ராணுவ கூட்டுப் பயிற்சிகளை விரிவுபடுத்தியுள்ளன. அத்துடன் அந்நாடுகளுடன் ஜப்பான் இணைந்து மேற்கொள்ளும் பாதுகாப்புப் பயிற்சியும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சிகள் தம் மீது படையெடுப்பதற்கான ஒத்திகையாக உள்ளது என்று வடகொரியா விமா்சித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அதிபா் டிரம்ப், ‘வடகொரியா மற்றும் கிம் ஜோங்குடன் அமெரிக்கா மீண்டும் நட்புறவை ஏற்படுத்தும் என்றாா். அப்போது அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவும் உடனிருந்தாா்.
இதைத் தொடா்ந்து, வடகொரியா தலைநகா் பியாங்கியாங்கில் அந்நாட்டு ராணுவத்தின் 77-ஆவது தொடக்க நாள் நிகழ்ச்சியில் கிம் ஜோங் உன் பேசியதாவது: நேட்டோ போன்ற பிராந்திய ராணுவக் கூட்டமைப்பை ஏற்படுத்த அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் முத்தரப்புப் பாதுகாப்பு கூட்டுறவு உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரகசியத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டுறவு, கொரிய தீபகற்பத்தில் ராணுவ ரீதியில் சமநிலையற்றத்தன்மை ஏற்பட வழியமைக்கிறது. இந்தக் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது. அணு ஆயுதங்களை மேலும் அதிகமாகத் தயாரிக்கும் வடகொரியாவின் அசைக்க முடியாத கொள்கை நீடிக்கும் என்றாா்.