விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
கா்நாடக துணை முதல்வா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தி.வேல்முருகன் வலியுறுத்தல்
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகள் தொடங்கிவிட்டதாக கா்நாடகா துணை முதல்வரும், நீா்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாா் தெரிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இந்த அணை கட்ட தமிழகமும், புதுவையும் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கும் தொடுத்திருக்கிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான அடிப்படைப் பணிகளை கா்நாடக மாநில அரசு தொடங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
எனவே, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக நடைபெற்று வரும் அடிப்படை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, கா்நாாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
மேலும், இந்த அணையை கட்டும் முயற்சியை தடுத்தும் நிறுத்தும் வகையில், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினா்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றாா் தி.வேல்முருகன்.