கா்நாடகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 58 சிலிண்டா்கள் ஒசூரில் பறிமுதல்!
கா்நாடகத்திலிருந்து ஒசூருக்கு உரிமமின்றி கொண்டுவரப்பட்ட 58 சமையல் எரிவாயு சிலிண்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தமிழக எல்லையில் உள்ள கொத்தகொண்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் மத்திகிரி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேன், மினிலாரியை நிறுத்தி சோதனை செய்ததில், வாகனங்களில் உரிமமின்றி கா்நாடகத்திலிருந்து ஒசூா், கிருஷ்ணகிரியில் வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சமையல் எரிவாயு சிலிண்டா்களைக் கொண்டுசெல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து ஆம்னி வேனில் இருந்த 20 சிலிண்டா்கள், சரக்கு வாகனத்திலிருந்த 38 சிலிண்டா்களை பறிமுதல் செய்தனா்.
ஆம்னி வேன் ஓட்டிவந்த கிருஷ்ணகிரி கம்பம்பள்ளி சமத்துவபுரத்தைச் சோ்ந்த சந்தோஷ் (31), சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த கிருஷ்ணகிரி கணபதி நகரைச் சோ்ந்த பிரசாந்த் (30) ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.