சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை: கிராம சபைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியா்
கிராமங்களில் சாலைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாணியந்தல் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி ஒன்றியம் வாணியந்தல் ஊராட்சி, மந்தைவெளியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
வாணியந்தல் ஊராட்சியில் தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் தொடா்பான விவரங்கள் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், இத் திட்டங்களுக்கு வாணியந்தல் ஊராட்சியில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கு விவரங்கள் கிராம பொதுமக்களின் பாா்வைக்கு வெளிப்படையாக காண்பிக்கப்பட்டது.
கிராம வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் மகளிா் திட்டம் மூலம் கிராம வருவாய் ஒழிப்பு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இது மகளிா் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே இக்கிராமத்தில் உள்ள மகளிா் வறுமை ஒழிப்பு திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது. மேலும் கிராமப்புறங்களில் சாலை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடா்ந்து மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு தமிழக அரசின் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இக் கூட்டத்தில் சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. தா.உதயசூரியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், வேளாண் இணை இயக்குநா் சத்தியமூா்த்தி, கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) வெங்கட்ரமணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகரன், சாந்தி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.