கிரிப்டோகரன்சி முதலீடு: ரூ. 300 கோடி மோசடி செய்த குஜராத் நிறுவனம்!
குஜராத்தில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து தருவதாகக் கூறி தனியார் நிறுவனம் ஒன்று 8,000 பேரிடம் ரூ. 300 கோடி மோசடி செய்துள்ளது.
குஜராத் ராஜ்கோட் நகரிலுள்ள பிளாக்கரா எனும் தனியார் நிறுவனம் கிரிப்டோகரன்சி முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி பல பேரை ஏமாற்றியுள்ளனர்.
கிரிப்டோகரன்சியில் ரூ. 4.25 முதலீடு செய்தால் தினமும் ரூ.4,000 வரை பணம் திரும்பக் கிடைக்கும் என்றும், முடிவில் ரூ. 12 லட்சம் திரும்ப வழங்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பல முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் பணாத்தை முதலீடு செய்தனர். தொடர்ந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இணைய கூட்டம் நடத்தி மேலும் பல நபர்களை வலையில் வீழ்த்த முயற்சித்தனர்.
இதையும் படிக்க | சைஃப் அலிகான் வழக்கு: முக்கியக் குற்றவாளி சத்தீஸ்கரில் கைது!
இரு ஆண்டுகள் தொடர்ந்து பல நபர்களிடம் பணத்தைப் பெற்ற அந்த நிறுவனம் திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு அனைவரும் தலைமறைவாகியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மோசடியில் பாதிக்கப்பட்ட முல்தானி மோசின் ரஷித்பாய் என்பவர் இன்று ராஜ்கோட் நகர கமிஷனர் அலுவலகத்தில் பிளாக்கரா நிறுவனம் மீது புகாரளித்தார்.
இதில் ராஜ்கோட் பகுதியில் பாதிக்கப்பட்ட 12 முதலீட்டாளர்கள் ரூ. 70 லட்சம் வரை ஏமாற்றப்பட்டதாகப் புகாரில் தெரிவித்தனர்.
இந்த மோசடியில் இதுவரை 8,000 பேர் வரை ஏமாற்றப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 300 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் பிளாக்கரா நிறுவனத்தின் நிறுவனர் ஃபிரோஸ் திலாவர் முல்தானி, அவரது கூட்டாளிகளான நிதின் ஜகத்யன், லிம்ப்டியைச் சேர்ந்த அமித் மனுபாய் முல்தானி, சவுராஷ்டிராவைச் சேர்ந்த மார்க்கெட்டிங் தலைவர் அஷ்ருதீன் சதக் முல்தானி, குஜராத் தலைவர் மக்சுத் சையத் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பெண் மருத்துவர் கொலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு: சஞ்சய் ராய் கூச்சல்
மேலும், சூரத் குற்றப்பிரிவு காவல்துறையிலும் இது தொடர்பாக தனியே புகாரளிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.