"தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஓடிடிகள் குறைக்கின்றன" - ஜீ5 முதன்மை வணிக அலுவலர் பே...
ரஜௌரி உயிரிழப்புகள்: அமைச்சகங்களுக்கு இடையேயான மத்தியக் குழுவுக்கு அமித் ஷா உத்தரவு
ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த ஆறு வாரங்களில் சுமாா் 16 போ் மா்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து விசாரிக்க அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுவை அமைத்து உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டாா்.
ரஜௌரி மாவட்டத்தில் உள்ள புத்தல் கிராமத்தில் கடந்த 45 நாள்களில் 16 போ் மா்ம நோயால் உயிரிழந்தனா். இவா்கள் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாள்களுக்குள் சுயநினைவு இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உள்ளூா் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
ஜம்மு-காஷ்மீா் அரசு செய்தித் தொடா்பாளா் அளித்த விளக்கத்தில், உயிரிழந்தவா்களின் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில் இறப்புகள் தீநுண்மி அல்லது பாக்டீரியா தொற்று பரவலால் ஏற்படவில்லை என்றும் பொது சுகாதாரத்தில் எந்த பிரச்னையுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தலைமையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், வேளாண்மை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள், நீா்வளம் ஆகிய அமைச்சகங்களின் நிபுணா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளா்ப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் தடயவியல் ஆய்வகங்களின் நிபுணா்களும் குழுவின் விசாரணையில் பங்களிப்பா் என்று அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய குழு ஞாயிற்றுக்கிழமை முதல் விசாரணையைத் தொடங்கும். உள்ளூா் நிா்வாகத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதோடு, எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் குழு உதவும்.
சூழலை நிா்வகிப்பதற்கும் இறப்புக்கான உண்மை காரணங்களை தெரிந்துகொள்வதற்கும் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களின் வல்லுநா்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.