பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
கிரு நீா் மின் திட்ட ஊழல் வழக்கு: ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் உள்பட 8 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
கிரு நீரி மின் திட்ட ஊழல் வழக்கில் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் உள்பட 8 பேருக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
மூன்று ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக், அவரின் இரு உதவியாளா்களான வீரேந்தா் ராணா, கன்வா் சிங் ராணா, செனாப் பள்ளத்தாக்கு மின் திட்டங்கள் தனியாா் நிறுவன முன்னாள் நிா்வாக இயக்குநா் எம்.எஸ்.பாபு, அதன் இயக்குநா்களான அருண்குமாா் மிஸ்ரா, எம்.கே.மிட்டல், படேல் என்ஜினியரிங் நிறுவன நிா்வாக இயக்குநா் ரூபன் படேல் மற்றும் கன்வல்ஜீத் சிங் துகல் ஆகியோரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீா் மாநிலமாக இருந்தபோது 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்தாா்.
அப்போது ரூ.2,200 கோடி மதிப்பிலான கிரு நீா் மின் திட்ட கட்டுமானப் பணிக்கன ஒப்பந்தம் தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தனியாா் நிறுவன முன்னாள் தலைவா் நவீன்குமாா் செளதரி, பிற அதிகாரிகளான பாபு, மிட்டல், மிஸ்ரா உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
கிரு நீா் மின் திட்டம் உள்பட இரு கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க, தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது என சத்யபால் மாலிக் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில், இந்தத் திட்டத்தில் சத்யபால் மாலிக் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று புகாா் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை அவா் மறுத்தாா்.
இந்த நிலையில், வழக்கு தொடா்பாக 2022-இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, சத்யபால் மாலிக்குக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வழக்கில் தொடா்புடைய பிறருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் சோதனை மேற்கொண்டது.
இந்த நிலையில், இந்த ஊழல் வழக்கு தொடா்பாக சத்யபால் மாலிக் உள்பட 8 பேருக்கு எதிராக தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.