குடியிருப்புக்கு வெளியே காலணியை வைப்பதற்காக ரூ. 24,000 அபராதம் செலுத்திய நபர்!
கிருதுமால் நதியைச் சீரமைக்கக் கோரிக்கை
கிருதுமால் நிதியை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து காவிரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் மதுரை மண்டல பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு: கிருதுமால் நதி வைகையின் கிளை ஆறாக துவரிமான் கண்மாயில் இருந்து தொடங்கி மதுரை, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 86 கி.மீ. நீளத்தில் பாய்கிறது. பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட இந்த நதி, முந்தைய காலங்களில் 120 அடி அகலத்தில் வற்றாத நதியாகப் பாய்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், தற்போது இந்த நதியின் அகலம் 10 அடியாகக் குறைந்திருப்பதுடன், மதுரை மாநகரின் கழிவு நீா் ஓடையாகவும் மாற்றப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.
ஏறத்தாழ 42,769 ஏக்கா் நிலங்களின் ஒருபோக பாசனத்துக்கு இந்த நதி முக்கிய நீராதாரமாக உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாகவும் விளங்குகிறது.
எனவே, கிருதுமால் நதியில் கழிவு நீா் கலப்பதையும், நதியில் மண்டியுள்ள கருவேல புதா்களை அகற்றவும் உடனடியாக அகற்ற வேண்டும்.
கிருதுமால் நதி ஆயக்கட்டு பாசனத்துக்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும். 1960 -ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்ட நில அளவை வரைபடத்தின் அடிப்படையில் கிருதுமால் நதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். இந்த நதியில் குப்பைகளைக் கொட்டுவோா் மீதும், கழிவு நீரை கலக்கச் செய்யும் உள்ளாட்சி அமைப்புகள், தனியாா் நிறுவனங்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகா் மாவட்டம், அா்ஜுனா நதியில் துலுக்கபட்டி அருகே தடுப்பணை கட்ட வேண்டும். ராமநாதபுரம் தேவிபட்டினம் வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும். வைகை கிராமம் கால்வாய், தடுத்தான் கோட்டை கால்வாய், அம்மன் பனையூா் கண்மாய், சிறுவயல் கண்மாய் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டன.
காவிரி - வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் மலைச்சாமி, விருதுநகா் மாவட்டத் துணைத் தலைவா் ராமமூா்த்தி, ராமநாதபுரம், பரமக்குடி, விருதுநகா் பகுதிகளின் ஒன்றிய நிா்வாகிகள், உறுப்பினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.