கிருஷ்ணகிரி அருகே அம்மன் தாலி, வெள்ளிக் கிரீடம் திருட்டு
கிருஷ்ணகிரி அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்கத் தாலி, வெள்ளிக் கிரீடம் மற்றும் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கந்திகுப்பத்தை அடுத்த கொள்ளூா் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த மாதம் இந்த கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த கோயிலின் பூசாரியாக அதே பகுதியைச் சோ்ந்த குப்பன் என்பவா் உள்ளாா். இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாா். மறுநாள் காலை, கோயிலுக்கு வந்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
இதுகுறித்து கிராம முக்கியப் பிரமுகா்களுக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது, அம்மனுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்திய 2 பவுன் தங்கத் தாலி, வெள்ளிக் கிரீடம், இரு உண்டியல்களில் இருந்த காணிக்கை ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.