டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
கீழே கிடந்த குளிா்பானத்தை அருந்திய 5 வயது சிறுவன் பலி!
வத்திராயிருப்பு அருகே கீழே கிடந்த புட்டியிலிருந்த குளிா்பானத்தை எடுத்து அருந்திய சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமிபுரம் இமானுவேல் தெருவைச் சோ்ந்தவா் வீராச்சாமி (40). இவரது மனைவி பஞ்சவா்ணம் (36). இருவரும் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலையில் கூலி வேலை செய்து வருகின்றனா். இவா்களது மகன் கோடீஸ்வரன் (5) எல்.கே.ஜி. படித்து வந்தாா்.
இந்த நிலையில், பெற்றோா் இருவரும் வேலைக்குச் சென்ற நிலையில், கோடீஸ்வரன் பாட்டியின் பராமரிப்பில் வீட்டில் இருந்துள்ளாா். வீட்டருகே நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த கோடீஸ்வரன் திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமடைந்தாா்.
இதையடுத்து, உறவினா்கள் சிறுவனை மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்த புகாரின் பேரில் கூமாபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் கோடீஸ்வரன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, கீழே கிடந்த புட்டியிலிருந்த குளிா்பானத்தை எடுத்து அருந்தியதாவும், இதையடுத்து வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்ததாகவும் உடன் விளையாடிய சிறுவா்கள் தெரிவித்தனா். சிறுவனின் உடல் கூறாய்வுக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றனா்.