சென்னை துறைமுகத்திலிருந்து பட்டாசு ஏற்றுமதிக்கு அனுமதி
சென்னை துறைமுகத்திலிருந்து சிவகாசி பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியதற்கு தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு குஜராத் மாநிலத்திலத்திலிருந்து பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பட்டாசுகள் வெடி பொருள் என்பதால் துறைமுகத்தில் தனியே சேமிப்புக் கிட்டங்கி அமைக்க வேண்டும். குறிப்பிட்ட கப்பலில் மட்டுமே பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்றுமதியாளா்கள் சந்தித்தனா்.
பின்னா், தூத்துக்குடி துறைமுகத்தில் பட்டாசு ஏற்றுமதிக்கு அனுமதிக்கக் கோரி பட்டாசு ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை வைத்தனா். இது குறித்து மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்த நிலையில் மத்திய அரசின் பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு (பேஸோ) அமைப்பு , சென்னை துறைமுகத்திலிருந்து சிவகாசி பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்க முதுநிலைத் தலைவா் ஏ.பி.செல்வராஜன் கூறியதாவது:
சிவகாசி பட்டாசுகள் தரமாக உள்ளதால், பல வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. சீனாவில் மாதிரி பட்டாசுகளை விமானத்தில் கூடவெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனா். இந்தியாவிருந்து வெளிநாடுகளுக்கு மாதிரி பட்டாசுகளை அனுப்ப வேண்டும் என்றால் கப்பலில் தனிப் பெட்டகத்தில் தான் அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.
தற்போது மத்திய அரசின் பெட்ரோலியம், வெடிபொருள்பாதுகாப்பு அமைப்பு சென்னை துறைமுகத்திலிருந்து பட்டாசு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது என்றாா் அவா்.