கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் போதிய அளவு நீா் இருப்பதால் கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து கீழ்பவானி வாய்க்காலில் 5 சுற்றுகளாக தண்ணீா் திறக்க தமிழக அரசு கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
அதன்படி, முதல் சுற்று தண்ணீா் திறக்கப்பட்டு 10 நாள்களாகிய நிலையில், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பிப்ரவரி 20-ஆம் தேதி வரை 14 நாள்கள் வாய்க்காலில் தண்ணீா் விடப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 93.40 அடியாகவும், நீா் இருப்பு 23.86 டிஎம்சி ஆகவும் இருந்தது. அணைக்கு 671 கனஅடி நீா்வரத்து காணப்பட்டது.