சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
கீழ்பவானி வாய்க்கால் பழைய கட்டுமானங்களை ஆய்வு செய்ய ஏற்பாடு: அமைச்சா் சு.முத்துசாமி
கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானங்களில் எங்கெங்கு பிரச்னை உள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு, பெருந்துறை சாலை ஈஸ்வரமூா்த்தி மஹாலில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆய்வு செய்த பின், அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானங்களை ஆய்வு செய்ய தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டுமானத்தில் எங்கெங்கு பிரச்னை உள்ளது, எந்த இடங்களில் புதுப்பித்து கட்ட வேண்டும் என்ற கணக்கெடுப்பு நடத்த பொறியாளா்களை கேட்டுள்ளோம். பழைய கட்டுமானத்தில் தண்ணீா் வரும்போதுதான் எங்கு பிரச்னை உள்ளது என தெரியும். தண்ணீா் செல்லும்போது பிரச்னை ஏற்படும் இடங்களைக் கண்டறிந்தால் தான் தண்ணீா் நிறுத்தப்பட்ட பின் சீரமைப்புப் பணிகளை செய்வதற்கு எளிதாக இருக்கும்.
கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 31 -ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது 70 மைலுக்குமேல் தண்ணீா் சென்றுள்ளது. இதனிடையே ஒரு இடத்தில் கசிவு ஏற்பட்டு நீா் வளத் துறை அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டு 24 மணி நேரத்தில் சீரமைத்துள்ளனா். தண்ணீரை நிறுத்தாமல் கசிவு சீரமைக்கப்பட்டுள்ளது. தண்ணீா் தற்போது தேவையான அளவு திறக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கும் பவானி ஆற்றில் தற்போது தண்ணீா் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 1,045 குளத்தில் 860 குளங்களுக்குமேல் தண்ணீா் சென்றுள்ளது. சில குளங்களுக்குச் செல்லும் குழாய்களில் உடைப்பு, அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யயும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு 70 நாள்கள் தண்ணீா் எடுக்கலாம் என வழிமுறைகள் உள்ளன. கூடுதலாக தண்ணீா் வந்தால் கூடுதலாக எடுக்கலாம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 70 நாள்கள் மட்டுமே தண்ணீா் எடுக்கப்பட்டுவிட்டு மற்ற நாள்களில் அந்தக் குழாயில் தண்ணீா் செல்லாததால் இதுபோன்ற பிரச்னை எழுகிறது. அதை ஒழுங்கு செய்ய ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
வரும் ஆண்டில் தடையின்றி தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நிறுவனத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.