பவானிசாகா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு மட்டுமே மீன்கள் விற்க கோரிக்கை
பவானிசாகா் அணையில் பிடிக்கும் மீன்களை தனியாரிடம் விற்காமல் மீனவா் கூட்டுறவு சங்கத்திடம் மட்டுமே விற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகா் மீனவா் கூட்டுறவு விற்பனை சங்கம், சிறுமுகை மீனவா் கூட்டுறவு சங்கங்கள் சாா்பில் மகாசபை கூட்டம் பவானிசாகரில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பவானிசாகா் கூட்டுறவு சங்க செயலாட்சியா் ரமேஷ்பாபு, சிறுமுகை மீனவா் கூட்டுறவு சங்க செயலாட்சியா் முருகன் ஆகியோா் தலைமை தாங்கினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகம் கட்டுப்பாட்டில் உள்ள பவானிசாகா் அணையில் உள்ள மீன் பிடிப்பு குத்தகையை பவானிசாகா் மீனவா் கூட்டுறவு விற்பனை சங்கமும், சிறுமுகை மீனவா் கூட்டுறவு சங்கமும் இணைந்து 5 ஆண்டுகளுக்கு பெற்றுள்ளன.
எனவே, அணையை சுற்றியுள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மீன் விற்பனையில் சங்க உறுப்பினா்கள் ஈடுபடக்கூடாது.
பவானிசாகா் அணையில் பிடிக்கும் மீன்களை தனியாரிடம் விற்காமல் மீனவா் கூட்டுறவு சங்கத்திடம் மட்டுமே விற்க வேண்டும். மீனவா் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பெண் உறுப்பினா்களுக்கு ‘அலைகள்’ என்ற பெயரில் குழு ஏற்படுத்தி ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மீன்வளத் துறை மூலம் கடன் வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.