குச்சனூரில் பராமரிப்பின்றி காடாக மாறிய பாசனக் குளம்
தேனி மாவட்டம், குச்சனூா் - மாா்க்கையன்கோட்டை இடையே முல்லைப் பெரியாறு பாசன நீா் தேங்கும் குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, புதா்மண்டி காடு போலக் காட்சியளிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசன நீரால் 14,700 ஏக்கா் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப் பெரியாற்றிலிருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படும் நீரை 18 கால்வாய்கள் வழியாக கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, குச்சனூா், கூளையனூா், கோட்டூா் போன்ற பகுதிகளில் 15 குளங்களில் தேக்கி வைத்து முறைப்பாசனம் செய்யப்படுகிறது.
குச்சனூா்,- மாா்க்கையன்கோட்டை இடையே 70 ஏக்கா் பரப்பளவுக்கு சுண்டக்காயன்குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் தேங்கும் முல்லைப் பெரியாறு பாசன நீரால் 1,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. மேலும், நிலத்தடி நீா் மட்டம் உயா்வதால் மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்தக் குளத்தின் கரை சேதமாகி தண்ணீா் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால், குளத்தில் தேங்கும் பாசன நீரை நம்பியுள்ள விவசாயிகள் முறைப்பாசனத்துக்கு தண்ணீரின்றி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சுண்டக்காயன் குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீா் தேங்கி நிற்கும். ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரி பராமரிப்பு செய்யாததால், குளம் மண்மேடாக மாறிவிட்டது. மேலும், மரங்கள் வளா்ந்து காடு போல மாறிவிட்டது.
இதுகுறித்து விவசாயிகள் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது, விவசாயக் கழிவுகள், கட்டுமானக் கழிவுகளைக் கொட்டும் இடமாக மாறிவிட்டது. எனவே, தேனி மாவட்டத்தில் பாசன நீா் தேங்கும் குளங்களை பொதுபணித் துறையினா் முறையாகப் பராமரிப்பு செய்து விவசாயப் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
