குடவாசல் வரதராஜப் பெருமாளுக்கு ஆண்டாள் சூடிய மாலை அணிவிப்பு
குடவாசல் வரதராஜ பெருமாள் கோயிலில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை, பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை இரவு அணிவிக்கப்பட்டது.
குடவாசல் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயிலில் இராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பூஜிக்கப்பட்ட கிளியுடன் கூடிய மாலை எடுத்து வரப்பட்டு, இக்கோயில் மூலவருக்கு அணிவிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டும் கூடாரவல்லி தினத்தில் ஆண்டாள் கோயிலில் ஆண்டாளுக்கு சூடி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட மாலை எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் வைத்து பூஜை செய்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வரதராஜ பெருமாள் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னா் சிறப்பு ஆராதனைகளுடன் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது.
நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.