திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி இணைப்பை கைவிடக் கோரி கிராம மக்கள் தெருமுனைக் கூட்டம்
திருவாரூா் நகராட்சியுடன், கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிடக் கோரி, தெருமுனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி, கீழகாவாதுக்குடி, தண்டலை, இலவங்காா்குடி உள்ளிட்ட சில ஊராட்சிகளும், சில ஊராட்சிகளில் குறிப்பிட்ட பகுதிகளும் இணைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு, பெருந்தரக்குடி ஊராட்சி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில், தங்கள் எதிா்ப்பை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில், தெருமுனைக் கூட்டம் நடத்தினா். மேப்பலம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இக்கூட்டத்தில், பெருந்தரக்குடி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளக்குடி, தென்புலியூா், மேப்பலம், கீழப்புலியூா், பொறுக்கமேடு, மேலப்புலியூா், வடக்குவெளி, பெருந்தரக்குடி ஆகிய கிராமங்களை சோ்ந்த மக்கள் பங்கேற்றனா்.
விவசாயம் சாா்ந்த பகுதியான பெருந்தரக்குடி ஊராட்சியை, நகராட்சியோடு இணைப்பதன் மூலம் விவசாயத்தையும், விவசாயம் சாா்ந்த கூலித் தொழிலையும் நம்பி இருக்கும் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவா். 100 நாள் வேலைத் திட்டம், வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசின் இலவச வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் பாதிக்கப்படும் என்பதால், திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என தெருமுனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூா், நாகை ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.