குந்துகோட்டையில் குடிநீா் கோரி சாலை மறியல்
ஒசூா்: தேன்கனிக்கோட்டையை அடுத்த குந்துகோட்டையில் குடிநீா் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது குந்துகோட்டை கிராமம். இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் குடிநீா் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தேன்கனிக்கோட்டை போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குந்துகோட்டை பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
மறியல் காரணமாக தேன்கனிக் கோட்டை- அஞ்செட்டி செல்லும் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.