குன்னூருக்கு மாற்றாக கோத்தகிரியில் புதிய அரசு கல்லூரி அமைக்க வேண்டும்: பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம்
தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் புதிய அரசுக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், மாற்றாக கோத்தகிரியில் தொடங்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏழாம் மண்டலம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏழாம் மண்டல செயலாளா் கே.சரவணக்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரியில் அரசு உதவிபெறும் கல்லூரியாக பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி கடந்த 59 ஆண்டுகளாக குன்னூரில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி 1966-இல் தொடங்கப்பட்டு தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கி வருகிறது. இக்கல்லூரி மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனா். இந்தக் கல்லூரியில் 8 இளங்கலை பாடப் பிரிவுகள், 7 முதுகலை பாடப்பிரிவுகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. குன்னூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவிகள் அதிக அளவில் இந்தக் கல்லூரியில் படித்து வருகின்றனா்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கல்லூரியில் மாணவிகளின் சோ்க்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், புதிய அரசு கல்லூரி அடுத்த ஆண்டுமுதல் செயல்பட தொடங்கினால் இந்தக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை மிகவும் பாதிக்கப்படும். மேலும் அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை மூடக்கூடிய அபாயமும் உள்ளது. இதனால் இங்குள்ள ஆசிரியா்களும் பாதிக்கப்படுவாா்கள். மேலும் 50 ஆண்டுகளைக் கடந்து பொன் விழா கண்ட கல்லூரியை மூடும் அபாயமும் ஏற்படும்.
ஏற்கெனவே ஒரு அரசு உதவி பெறும் மகளிா் கல்லூரி குன்னூரில் இயங்கி வருவதால் புதிய கல்லூரி தொடங்கினால் ஆண்கள் மட்டுமே பயிலும் கல்லூரியாக தொடங்க வேண்டும். மேலும் அரசு உதவிபெறும் கல்லூரியில் இருந்து குறைந்தபட்சம் 20 கி.மீ. தொலைவுக்கு மேல் தொடங்க வேண்டும். அதே நேரத்தில் புதிய அரசுக் கல்லூரியை கோத்தகிரியில் தொடங்கினால் குன்னூா், உதகை மற்றும் சுற்றியுள்ள மாணவா்ளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே இது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக முதல்வா், உயா்கல்வித் துறை அமைச்சா் ஆகியோரை வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.