குமரியில் ரூ.8.03 கோடியில் புதிய பாலங்கள், கட்டடங்கள்: காணொலியில் திறந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 ஊராட்சிகளில் ரூ. 8.03 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பாலம், கட்டடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையொட்டி, திருவட்டாறு ஒன்றியம் மலைவிளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா குத்துவிளக்கேற்றி முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.
இம்மாவட்டத்தில் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சத்தில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் லீபுரம் ஊராட்சி ஆமணக்கன்விளை அரசு தொடக்கப்பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் கட்டிமாங்கோடு ஊராட்சி மூலச்சன்விளை ரேஷன் கடைக்கு உணவு தானிய சேமிப்பு அறை, கிள்ளியூா் ஒன்றியம் கொல்லஞ்சி ஊராட்சி குட்டவிளையில் ரூ.10 லட்சத்தில் புதிய உணவு தானிய கிடங்கு, 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் (சுகாதாரம்) தக்கலை ஒன்றியம், திக்கணங்கோடு ஊராட்சி தாறாவிளை பகுதியில் ரூ. 40 லட்சத்தில் ஓலவிளை துணை சுகாதார நிலையக் கட்டடம், முன்சிறை ஒன்றியம் தூத்தூா் ஊராட்சியில் ரூ.1.27 கோடியிலும், மங்காடு ஊராட்சியில் ரூ.1.25 கோடியிலும் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.4.53 கோடியில் திருவட்டாறு ஒன்றியம் அயக்கோடு ஊராட்சி பரளியாற்றின் குறுக்கே மலைவிளை - செங்கோடி இணைப்புப் பாலம் என மொத்தம் ரூ.8.03 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலம் - கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் ஆன்றணி பொ்னாண்டோ, செயற்பொறியாளா் இயலிசை, திருவட்டாறு வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ் குமாா், ஒப்பந்ததாரா் கேட்சன், முன்னாள் ஊராட்சித் தலைவா் தங்க ரமணி, உதவிப் பொறியாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.