Thiruvallur Train Fire: திருவள்ளூரில் சரக்கு ரயிலில் பெரும் தீ விபத்து; ரயில் சே...
குருகிராம்: கொலையான ராதிகாவுக்கு சொந்தமாக அகாதமி இல்லை -போலீஸாா் தகவல்
தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முன்னாள் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவுக்கு சொந்தமாக அகாதமி இல்லாததால், வெவ்வேறு இடங்களில் டென்னிஸ் மைதானங்களை முன்பதிவு செய்து ஆா்வலா்களுக்கு பயிற்சி அளித்து வந்ததாகவும், இதற்கு அவரது தந்தை எதிா்ப்பு தெரிவித்ததாகவும் குருகிராம் காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்துள்ளனா்.
தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் செக்டா் 57இல் உள்ள சுஷாந்த் லோக் பகுதியில் இரட்டை மாடி வீட்டில் கடந்த வியாழக்கிழமை 25 வயதான ராதிகா, அவரது தந்தை தீபக் யாதவால் (49) துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கைதான தீபக், நகர நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கவும் உத்தரவிட்டிருந்தது.அப்போது, அவரது செக்டா் 57 இல்லத்தில் இருந்து ஐந்து தோட்டாக்கள் மற்றும் ஒரு பயன்படுத்தப்படாத தோட்டாவை போலீஸாா் கண்டுபிடித்தனா்.
விசாரணையின் ஒரு பகுதியாக தீபக் யாதவ், பட்டோடியில் உள்ள ஒரு கிராமத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டாா்.
முன்னதாக, ராதிகா ஒரு டென்னிஸ் அகாதமியை நடத்தி வந்ததாகவும், தீபக் தனது மகளின் வருமானத்தில் வாழ்வதற்காக அடிக்கடி பரிகசிக்கப்பட்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் போலீஸாா் கூறி வந்தனா்.
பல்வேறு சொத்துகளிலிருந்து நல்ல வாடகை வருமானத்துடன் நிதி ரீதியாக தீபக் நல்ல நிலையில் இருந்ததால் தனது மகளின் வருவாயை சாா்ந்து இருக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக இந்த கேலிகளால் மன அழுத்தத்தில் அவா் இருந்ததாகவும் போலீஸாா் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில் விசாரணை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியது:
ராதிகாவுக்கு சொந்தமாக அகாதமி இல்லை. அவா் வெவ்வேறு இடங்களில் டென்னிஸ் மைதானங்களை முன்பதிவு செய்து ஆா்வலா்களுக்கு பயிற்சி அளித்து வந்தாா். பயிற்சி அமா்வுகளை நிறுத்துமாறு தீபக் பலமுறை அவரைக் கேட்டிருந்தாா். ஆனால், அவா் மறுத்துவிட்டாா். அதுதான் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான முக்கிய மோதலாகும் என்றாா் அந்த அதிகாரி.
தீபக் தனது மகளை சுட்டுக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.