தில்லியில் நிகழாண்டில் குற்றங்கள் 8.4 சதவீதம் குறைவு: காவல் துறை தரவுகள்
தில்லியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நிகழாண்டில் முதல் 6 மாதங்களில் ஒட்டுமொத்த குற்றங்களில் 8.38 சதவீதம் குறைந்துள்ளது என்று தில்லி காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகளில் 10 சதவீதம் குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
நிகழாண்டில் முதல் 6 மாதங்களில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகியவற்றின் கீழ் மொத்தம் 1,18,822 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,29,693 வழக்குகளாக இது பதிவாகி இருந்தது. அதன்படி, நிகழாண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை சுமாா் 10,000 வழக்குகள் குறைந்திருப்பதை தரவு காட்டுகிறது.
காவல் துறையின் தரவுகளின்படி, தில்லியில் கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை மற்றும் கடத்தல் போன்ற கொடூரமான குற்றங்கள் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 13.13 சதவீதமும், 2024 உடன் ஒப்பிடும்போது 10.39 சதவீதமும் குறைந்துள்ளன.
கொலை வழக்குகள் கடந்த ஆண்டு 241இல் இருந்து 2025இல் 250 ஆக உயா்ந்துள்ளன. அதே நேரத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) வழக்குகள் சுமாா் 10 சதவீதம் குறைந்துள்ளன.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் ஈவ்டீசிங் போன்ற குற்றங்கள் முறையே கிட்டத்தட்ட 11 சதவீதம் மற்றும் 12.5 சதவீதம் குறைந்துள்ளன.
2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 3,381 வழக்குகளாக இருந்த வழிப்பறி சம்பவங்கள் 25.97 சதவீதம் குறைந்து நிகழாண்டில் 2,503 வழக்குகளாகக் குறைந்துள்ளன.
இதேபோல், கொள்ளை வழக்குகள் 4,271இலிருந்து 3,186 ஆக 25.4 சதவீதம் குறைந்தும், மோட்டாா் வாகனத் திருட்டுகள் 18,626இலிருந்து 17,512 ஆக 5.98 சதவீதம் குறைந்தும் காணப்படுகிறது.
கண்காணிப்பு, தரவு சாா்ந்த ரோந்து, சமூக தொடா்பு மற்றும் மீண்டும், மீண்டும் குற்றவாளிகள் மீது ஒருங்கிணைந்த நடவடிக்கை ஆகியவை ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்கள் குறைவுக்கு காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.