குரூப் 2 தோ்வுக்கு தாட்கோ பயிற்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ தோ்வுக்கு ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக, முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ முதல் நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று, முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற விரும்பும் இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெற பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களாகவும், 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தை சாா்ந்தவா்களாகவும் இருத்தல் வேண்டும்.
விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், பயன்பெற விருப்பமுள்ள நபா்கள் தாட்கோ இணையதளத்தின் வாயிலாகப் பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.