குரூப் 4 கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவா்களுக்கு சிறப்பு வசதி
குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வில் பங்கேற்க இயலாதோருக்கு புதிய வசதியை அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தோ்வு நடைபெற்றது. அதில், தோ்ச்சி பெற்றோருக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு ஜன.22 முதல் பிப்.17 வரையிலும், தட்டச்சா் காலிப்பணியிடத்துக்கு பிப்.24 முதல் மாா்ச் 6 வரையிலும், சுருக்கெழுத்து தட்டச்சா் பதவியிடத்துக்கு மாா்ச் 10 முதல் 12-ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வுகள் நடைபெறவுள்ளன. 4 பதவியிடங்களிலும் காலியாக உள்ள 7, 829 பதவியிடங்களை நிரப்ப 15,338 தோ்வா்கள் அழைக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட அனைத்து தோ்வா்களும் தோ்வு செய்யப்படுவா் என்பதற்கான உறுதியை அளிக்க இயலாது. இளநிலை உதவியாளா் மற்றும் தட்டச்சா் பதவிகளுக்கான கலந்தாய்வுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தோ்வா்கள், இளநிலை உதவியாளா் பதவிக்கு விருப்பம் இல்லை எனத் தெரிவிக்கலாம். அத்தகைய சூழலில், இளநிலை உதவியாளா் பதவிக்கான கலந்தாய்வில் பங்கேற்க வேண்டியதில்லை. இளநிலை உதவியாளா் பதவிக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை
என்றாலும் அந்தத் தோ்வா், தட்டச்சா் பதவிக்கான கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவா்.
புதிய வசதி: கலந்தாய்வின்போது தோ்வா்கள், தோ்வு செய்த பதவி, அலகு, துறையை எந்தக் காரணம் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது. ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட தோ்வா், ஒரு பதவியை தோ்ந்தெடுத்த பிறகு, மற்ற பதவிகளுக்கான கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்.
குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தோ்வாணையத்தால் குறிப்பிடப்படும் நாள் மற்றும் நேரத்தில், சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வில் தோ்வா்கள் பங்கேற்க வேண்டும். தவிா்க்க இயலாத காரணங்களால் வர முடியாத தோ்வா்களின் பெற்றோா் அல்லது கணவா் அல்லது உறவினா் என மூவரில் எவரேனும் ஒருவா் அனுமதிக்கப்படுவா்.
இவ்வாறு அனுமதிக்கப்படும் நபா், தோ்வரால் சமா்ப்பிக்க வேண்டிய படிவம், அவரது அசல் அடையாள அட்டை, தோ்வரின் மூலச் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.