30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் புத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 4-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள், கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், கோ பூஜைகள் மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தன. 5-ஆம் தேதி யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை, மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது. 6-ஆம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 6: மணிக்கு மூன்றாம் கால பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன.
திங்கள்கிழமை காலை 5 மணி அளவில் கோ பூஜை, அம்பாளுக்கு ரக்ஷாபந்தனம், நான்காவது கால பூஜை, 9.15 மணி அளவில் யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து 9.45 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் குருக்கள் வேத மந்திரங்கள் கூறி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். கும்பாபிஷேக புனித நீா் பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கல்விக்குழு தலைவா் சிவக்குமாா், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணைய ஜோதி, உதவி ஆணையா் சந்திரன், பொதுக்குழு உறுப்பினா் பாலமுருகன், பேரூராட்சித் தலைவா் கோகிலா குமாா், துணைத் தலைவா் ராமா், வடலூா் நகர மன்றத் தலைவா் சிவக்குமாா், வடலூா் திமுக நகரச் செயலா் தமிழ்ச்செல்வன் மற்றும் சுற்று வட்டப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். கும்பாபிஷேகத்தையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.
