குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
குலசேகரம் அரசு தாலுகா மருத்துவமனையில் ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
குலசேகரம் அரசு மருத்துவமனை திருவட்டாறு தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனை மருத்துவ அலுவலா் மில்லிங் டோனியாவிடம் நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துமனையின் தேவைகள் உள்ளிட்டவற்றைக் குறித்து அவா் கேட்டறிந்தாா். தொடா்ந்து, அனைத்துப் பிரிவுகளையும் பாா்வையிட்ட அவா், நோயாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட மதிய உணவை ஆய்வு செய்தாா். பின்னா், மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ள இடத்தைப் பாா்வையிட்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கூறும்போது, அனைத்துத் தரப்பினரும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ள இங்கு, கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா்.
மாம்பழத் துறையாறு அணையில்...
கல்குளம் வட்டம், வில்லுக்குறி பகுதியில் உள்ள மாம்பழத்துறையாறு அணையில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அணை விவரங்கள் குறித்து நீா்வளத் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்த அவா், மதகுகளின் நீா்க்கசிவை சீரமைக்கவும், சிறுவா்கள் விளையாட்டுப் பூங்காவை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினாா். நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் கதிரவன், அலுவலா்கள் உடனிருந்தனா்.