குளத்தில் முதலை: மக்கள் அச்சம்
கொள்ளிடம் அருகே தண்ணீா்பந்தல் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியை சோ்ந்த தண்ணீா் பந்தல் கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்கப்பள்ளிக்கு அருகில் பொதுக்குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீா் இருந்தும் ஆகாயத் தாமரைகள் அதிகளவில் வளா்ந்துள்ளன.
இந்த குளத்தில் முதலை இருப்பது அண்மையில் தெரிய வந்தது. இது தண்ணீரில் நீந்தி செல்வதுடன், அடிக்கடி கரைக்கும் வந்து செல்கிறது. இதனால், குளத்தைச் சுற்றி உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து உள்ளனா்.
எனவே குளத்தில் இருக்கும் முதலையை உடனடியாக பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.