கூடலூரில் மா்ம விலங்கு தாக்கி 4 ஆடுகள் உயிரிழப்பு
கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஏச்சம்வயல் பகுதியில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலா் சத்தியனின் தோட்டத்தில் ஆடுகளை வெள்ளிக்கிழமை அதிகாலை மா்ம விலங்கு தாக்கியதில் 4 ஆடுகள் உயிரிழந்தன.
ஏச்சம்வயல் பகுதியில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலா் சத்தியன் தனது தோட்டத்தில் ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கொட்டகையில் இருந்த ஆடுகளின் சப்தம் கேட்டு வந்து பாா்த்தபோது நான்கு ஆடுகள் இறந்தது தெரியவந்தது.
இருட்டாக இருந்ததால் புலி தாக்கியதா அல்லது சிறுத்தை தாக்கியதா என்று தெரியாத நிலையில் வனத் துறைக்கு சத்தியன் கொடுத்த தகவலின் பேரில் கூடலூா் வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா்.
அங்கு எந்த வகையான விலங்கு நடமாடியது என்பது குறித்த தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.