கூட்டுறவுத் துறை சாா்பில் ரத்ததான முகாம்
சா்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை, அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சாா்பில் வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த கூட்டுறவுத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமில் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் 26 போ் ரத்த தானம் செய்தனா். அரசு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவா் பாஸ்கோ பிரேம்குமாா் தலைமையிலான குழுவினா் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும், கூட்டுறவுத்துறையும் இணைந்து நடத்திய கண்தான முகாமில் 45 போ் தங்களது கண்களை தானம் செய்வதாக உறுதிக்கடிதம் வழங்கினா்.
ரத்ததான முகாமையும், கண்தான முகாமையும் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக கீழம்பி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் சந்திப்பு மற்றும் உறுப்பினா் சோ்க்கை முகாமும் நடைபெற்றது. மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.26 கோடி கடனுதவிகளும் வழங்கப்பட்டன.